1
போரில் கிடைத்த வெற்றிப்பொருள்(அன்ஃபால்)களைப் பற்றி உம்மிடம் அவர்கள் கேட்கிறார்கள். (அதற்கு நபியே!) நீர் கூறுவீராக அன்ஃபால் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் சொந்தமானதாகும்; ஆகவே அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; உங்களிடையே ஒழுங்குடன் நடந்து கொள்ளுங்கள்; நீங்கள் முஃமின்களாக இருப்பின் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்.
2
உண்மையான முஃமின்கள் யார் என்றால், அல்லாஹ்(வின் திருநாமம் அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இருதயங்கள் பயந்து நடுங்கிவிடும்; அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய ஈமான் (பின்னும்) அதிகரிக்கும்; இன்னும் தன் இறைவன் மீது அவர்கள் முற்றிலும் நம்பிக்கை வைப்பார்கள்.
3
அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள்; அவர்களுக்கு நாம் அளித்த (செல்வத்)திலிருந்து நன்கு செலவு செய்வார்கள்.
4
இத்தகையவர் தாம் உண்மையான முஃமின்கள் ஆவார்கள்; அவர்களுடைய இறைவனிடம் அவர்களுக்கு உயர் பதவிகளும், பாவ மன்னிப்பும் சங்கையான உணவும் உண்டு.
5
(நபியே!) உம் இறைவன் உம்மை உம் வீட்டைவிட்டு சத்தியத்தைக் கொண்டு (பத்ரு களம் நோக்கி) வெளியேற்றிய போது முஃமின்களில் ஒரு பிரிவினர் (உம்முடன் வர இணக்கமில்லாது) வெறுத்துக் கொண்டிருந்தது போல.
6
அவர்களுக்கு தெளிவான பின்னரும் சத்தியத்தில் அவர்கள் உம்முடன் விவாதம் செய்கின்றனர்; அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே யாரோ அவர்களை மரணத்தின்பால் இழுத்துக் கொண்டு செல்வது போன்று (நினைக்கின்றார்கள்).
7
(அபூஸுஃப்யான் தலைமையில் வரும் வியாபாரக் கூட்டம் அபூ ஜஹ்லின் தலைமையில் வரும் படையினர் ஆகிய) இரு கூட்டங்களில் (ஏதேனும்) ஒரு கூட்டத்தை (வெற்றி கொள்ளும் வாய்ப்பு) உங்களுக்கு உண்டு என்று, அல்லாஹ் வாக்களித்ததை நினைவு கூறுங்கள். ஆயுத பாணிகளாக இல்லாத (வியாபாரக் கூட்டம் கிடைக்க வேண்டுமென) நீங்கள் விரும்பினீர்கள்; (ஆனால்) அல்லாஹ் தன் திருவாக்குகளால் சத்தியத்தை நிலைநாட்டவும் காஃபிர்களை வேரறுக்கவுமே நாடுகிறான்.
8
மேலும் குற்றவாளிகள் வெறுத்த போதிலும், அல்லாஹ் பொய்யை அழித்து ஹக்கை-உண்மையை - நிலைநாட்டவே (நாடுகிறான்).
9
(நினைவு கூறுங்கள்;) உங்களை இரட்சிக்குமாறு உங்கள் இறைவனின் உதவியை நாடியபோது "(அணி அணியாக உங்களைப்) பின்பற்றி வரக்கூடிய ஓராயிரம் மலக்குகளைக் கொண்டு நிச்சயமாக உங்களுக்கு உதவி புரிவேன்" என்று இறைவன் உங்களுக்கு பதிலளித்தான்.
10
உங்கள் இருதயங்கள் திருப்தியடைவதற்காகவும், ஒரு நன்மாராயமாகவும் (இந்த வெற்றியை) அல்லாஹ் ஆக்கினான்; அல்லாஹ்விடமிருந்தே தவிர உதவி இல்லை நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
11
(நினைவு கூறுங்கள்;) நீங்கள் அமைதியடைவதற்காக அவன் சிறியதொரு நித்திரை உங்களை பொதிந்து கொள்ளுமாறு செய்தான்; இன்னும் உங்களை அதன் மூலம் தூய்மைப்படுத்துவதற்காகவும், ஷைத்தானின் தீய எண்ணங்களை உங்களைவிட்டு நீக்குவதற்காகவும், உங்கள் இருதயங்களைப் பலப்படுத்தி, உங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவதற்காகவும், அவன் உங்கள் மீது வானிலிருந்து மழை பொழியச் செய்தான்.
12
(நபியே!) உம் இறைவன் மலக்குகளை நோக்கி; "நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன்; ஆகவே, நீங்கள் முஃமின்களை உறுதிப்படுத்துஙகள்; நிராகரிப்போரின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன்; நீங்கள் அவர்கள் பிடரிகளின் மீது வெட்டுங்கள்; அவர்களுடைய விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள்" என்று (வஹீ மூலம்) அறிவித்ததை நினைவு கூறும்.
13
இதற்கு காரணம்; நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் விரோதம் செய்தார்கள். எவர் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் விரோதம் செய்வாரோ - நிச்சயமாக அல்லாஹ் கடினமாகத் தண்டனை செய்பவனாக இருக்கிறான்.
14
இதை(தண்டனையை)ச் சுவையுங்கள்; நிச்சயமாக காஃபிர்களுக்கு நரக வேதனையுண்டு என்று (நிராகரிப்போருக்குக்) கூறப்படும்.
15
நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் நிராகரிப்போரைப் (போரில்) ஒன்று திரண்டவர்களாக சந்தித்தால் அவர்களுக்கு புறமுதுகு காட்டாதீர்கள்.
16
(எதிரிகளை) வெட்டுவதற்காகவோ அல்லது (தம்) கூட்டத்தாருடன் சேர்ந்து கொள்வதற்காகவோயன்றி, அந்நாளில் எவரேனும் தம் புறமுதுகைக் காட்டித் திரும்புவாரானால், நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் கோபத்திற்கு உள்ளாகி விடுவார் - அவர் தங்குமிடம் நரகமே இன்னும் அது மிகவும் கெட்ட தங்குமிடம்.
17
(பத்ரு போரில்) எதிரிகளை வெட்டியவகள் நீங்கள் அல்ல - அல்லாஹ் தான் அவர்களை வெட்டினான்; (பகைவர்கள் மீது மண்ணை) நீர் எறிந்தபோது அதனை நீர் எறியவில்லை, அல்லாஹ்தான் எறிந்தான்; முஃமின்களை அழகான முறையில் சோதிப்பதற்காகவே அல்லாஹ் இவ்வாறு செய்தான்; நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவி ஏற்பவனாகவும், (எல்லாம்) அறிபவனாகவும் இருக்கின்றான்.
18
இன்னும், நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்போரின் சூழ்ச்சியை இழிவாக்கி (சக்தியற்றதாய்) ஆக்குவதற்கும் (இவ்வாறு செய்தான்.)
19
(நிராகரிப்பவர்களே!) நீங்கள் வெற்றி(யின் மூலம் தீர்ப்பைத்) தேடிக் கொண்டிருந்தால், நிச்சயமாக அவ்வெற்றி (முஃமின்களுக்கு) வந்து விட்டது இனியேனும் நீங்கள் (தவறை விட்டு) விலகிக் கொண்டால் அது உங்களுக்கு நலமாக இருக்கும்; நீங்கள் மீண்டும் (போருக்கு) வந்தால் நாங்களும் வருவோம்; உங்களுடைய படை எவ்வளவு அதிகமாக இருந்தாலும், அது உங்களுக்கு எத்தகைய பலனையும் அளிக்காது. மெய்யாகவே அல்லாஹ் முஃமின்களோடு தான் இருக்கின்றான் (என்று முஃமின்களே கூறி விடுங்கள்).
20
முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையிலேயே அவரை புறக்கணிக்காதீர்கள்.
21
(மனப்பூர்வமாகச்) செவியேற்காமல் இருந்துகொண்டே, "நாங்கள் செவியுற்றோம்" என்று (நாவால் மட்டும்) சொல்கின்றவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்.
22
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உயிர்ப்பிராணிகளில் மிக்க கேவலமானவர்கள் (உண்மையை) அறிந்து கொள்ளாச் செவிடர்களும் ஊமைகளும் தாம்.
23
அவர்களிடத்தில் ஏதேனும் நன்மை உண்டு என அல்லாஹ் அறிந்திருந்தால், அவன் அவர்களைச் செவியேற்குமாறு செய்திருப்பான்; (அவர்கள் இருக்கும் நிலையில்) அவன் அவர்களைச் செவியேற்கச் செய்தாலும் அவர்கள் புறக்கணித்து மாறியிருப்பார்கள்.
24
ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வும், அவன் தூதரும் உங்களை உங்களுக்கு உயிர் அளிக்கக்கூடிய காரியத்தின்பால் அழைத்தால் நீங்கள் அவர்களுக்கு பதிலளியுங்கள்; இன்னும், மெய்யாகவே அல்லாஹ் மனிதனுக்கும் அவன் இருதயத்திற்குமிடையேயும் ஆதிக்கம் செலுத்துகிறான் என்பதையும், அவனிடத்திலேயே நீங்கள் ஒன்று சேர்க்கப் படுவீர்கள் என்பதையும் (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள்.
25
நீங்கள் வேதனைக்கு பயந்து கொள்ளுங்கள்; அது உங்களில் அநியாயம் செய்தவர்களை மட்டும்தான் குறிப்பாகப் பிடிக்கும் என்பதில்லை - நிச்சயமாக அல்லாஹ் தண்டனை அளிப்பதில் கடுமையானவன் என்பதையும் நன்கு அறிந்து கொள்ளுங்கள்.
26
நீங்கள் பூமியில் (மக்காவில்) சிறு தொகையினராகவும், பலஹீனர்களாகவும் இருந்த நிலையில், உங்களை (எந்த நேரத்திலும்) மனிதர்கள் இறாஞ்சிக் கொண்டு சென்று விடுவார்கள் என்று நீங்கள் பயப்பட்டுக் கொண்டிருந்த போது அவன் உங்களுக்கு (மதீனாவில்) புகலிடம் அளித்துத் தன் உதவியைக் கொண்டு உங்களை பலப்படுத்தினான் - இன்னும் பரிசுத்தமான ஆகாரங்களையும் அவன் உங்களுக்கு அளித்தான்; இவற்றை நினைவு கூர்ந்து (அவனுக்கு) நீங்கள் நன்றி செலுத்துவீர்காளாக!
27
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் மோசம் செய்யாதீர்கள் நீங்கள் அறிந்து கொண்டே, உங்களிடமுள்ள அமானிதப் பொருட்களிலும் மோசம் செய்யாதீர்கள்.
28
நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள்.
29
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்வீர்களானால் அவன் உங்களுக்கு (நன்மை தீமையைப்) பிரித்தறிந்து நடக்கக்கூடிய நேர்வழி காட்டுவான்; இன்னும் உங்களை விட்டும் உங்கள் பாவங்களைப் போக்கி உங்களை மன்னிப்பான்; ஏனெனில் அல்லாஹ் மகத்தான அருட்கொடையுடையவன்.
30
(நபியே!) உம்மைச் சிறைப்படுத்தவோ, அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை (ஊரைவிட்டு) வெளியேற்றிவிடவோ நிராகரிப்போர் சூழ்ச்சிசெய்ததை நினைவு கூறுவீராக அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; அல்லாஹ்வும் (அவர்களுக்கு எதிராகச்) சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்னையுடையவன்.
Sonraki 30 ayet →