2
(யாவரையும்) மிகைத்தோனும், மிக அறிந்தோனுமாகிய அல்லாஹ்விடமிருந்து இறக்கியருளப்பட்டதே இவ்வேதம்.
3
பாவத்தை மன்னிப்பவனும், தவ்பாவை - மன்னிப்புக் கேட்பதை - அங்கீகரிப்பவனும், தண்டிப்பதில் கடுமையானவனும், தயை மிக்கவனும் ஆவான், அவனைத் தவிர நாயன் இல்லை அவனிடமே (யாவரும்) மீள வேண்டியதிருக்கிறது.
4
நிராகரிப்பவர்களைத் தவிர(வேறு எவரும்) அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றி தர்க்கம் செய்ய மாட்டார்கள். ஆகவே, பட்டணங்களில் அவர்களுடைய (ஆடம்பர) நடமாட்டம் உம்மை ஏமாற்றி விட வேண்டாம்.
5
இவர்களுக்கு முன்னரே நூஹின் சமூகத்தாரும், அவர்களுக்குப் பிந்திய கூட்டங்களும் (நபிமார்களைப்) பொய்ப்பித்தார்கள்; அன்றியும் ஒவ்வொரு சமுதாயமும் தம்மிடம் வந்த தூதரைப் பிடிக்கக் கருதி, உண்மையை அழித்து விடுவதற்காகப் பொய்யைக் கொண்டும் தர்க்கம் செய்தது. ஆனால் நான் அவர்களைப் பிடித்தேன்; (இதற்காக அவர்கள் மீது விதிக்கப் பெற்ற) என் தண்டனை எவ்வாறு இருந்தது?
6
இவ்வாறே, நிராகரிப்பவர்கள் நிச்சயமாக நரகவாசிகள்தாம் என்ற உம்முடைய இறைவனின் வாக்கு அவர்கள் மீது உறுதியாகிவிட்டது.
7
அர்ஷை சுமந்து கொண்டிருப்பவர்களும், அதைச் சுற்றியுள்ளவர்களும் தங்கள் இறைவனின் புகழைக் கொண்டு அவனைத் தஸ்பீஹு செய்து கொண்டும் இருக்கிறார்கள்; அவன் மேல் ஈமான் கொண்டவர்களாக மற்ற ஈமான் கொண்டவர்களுக்காக மன்னிப்புக் கோருகின்றனர்; "எங்கள் இறைவனே! நீ ரஹ்மத்தாலும், ஞானத்தாலும், எல்லாப் பொருட்களையும் சூழந்து இருக்கிறாய்! எனவே, பாவமீட்சி கோரி, உன் வழியைப் பின்பற்றுபவர்களுக்கு, நீ மன்னிப்பளிப்பாயாக. இன்னும் அவர்களை நரக வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!
8
எங்கள் இறைவனே! நீ அவர்களுக்கு வாக்களித்திருக்கும், நிலையான சுவர்க்கத்தில், அவர்களையும், அவர்கள் மூதாதையர்களிலும், அவர்கள் மனைவியர்களிலும், அவர்கள் சந்ததியார்களிலும் நன்மை செய்தோரையும் பிரவேசிக்கச் செய்வாயாக. நிச்சயமாக நீ தான் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.
9
இன்னும், அவர்களைத் தீமைகளிலிருந்து காப்பாயாக! அந்நாளில் நீ யாரை தீமைகளிலிருந்து காத்துக் கொள்கிறாயோ, அவர்களுக்கு நிச்சயமாக நீ அருள் புரிந்து விட்டாய் - அதுவே மகத்தான வெற்றியாகும் (என்றும் கூறுவர்).
10
நிச்சயமாக நிராகரிப்பவர்களிடம்; "இன்னு நீங்கள் உங்கள் ஆன்மாக்களைக் கோபித்துக் கொள்வதைவிட அல்லாஹ்வுடைய கோபம் மிகப் பெரியதாகும்; ஏனென்றால் நீங்கள் நம்பிக்கையின் பால் அழைக்கப்பட்ட போது (அதை) நிராகரித்து விட்டீர்களே" என்று அவர்களிடம் கூறப்படும்.
11
அதற்கவர்கள்; "எங்கள் இறைவனே! நீ எங்களை இருமறை மரணமடையச் செய்தாய்; இருமறை நீ எங்களை உயிர்ப்பித்தாய்; ஆகையால் நாங்கள் (இப்பொழுது) எங்கள் பாவங்களை ஒப்புக் கொண்டோம் - எனவே (இதிலிருந்து தப்பி) வெளியேர ஏதும் வழியுண்டா?" எனக் கூறுவர்.
12
(பதில் கூறப்படும்;) "அதற்குக் காரணம் அல்லாஹ் ஒருவனே (வணக்கத்திற்குரியவன்; எனவே அவனை வணங்குங்கள்) என்று அழைக்கப்பட்ட போது நீங்கள் நிராகரித்தீர்கள்; ஆனால், அவனுக்கு (எதையும்) இணையாக்கப்பட்டால் (அதன் மீது) நீங்கள் நம்பிக்கை கொண்டீர்கள்; ஆகவே இத்தீர்ப்பு மிக்க மேலானவனும், மகாப் பெரியவனுமான அல்லாஹ்வுக்கே உரியது."
13
அவனே தன் அத்தாட்சிகளை உங்களுக்குக் காண்பிக்கிறான்; உங்களுக்கு வானத்திலிருந்து உணவையும் இறக்கிவைக்கிறான் - எனவே அவனையே முன்னோக்கி நிற்பவர்களைத் தவிர (வேறு யாரும்) நல்லுணர்வு பெறமாட்டார்கள்.
14
ஆகவே, காஃபிர்கள் வெறுத்த போதிலும், நீங்கள் முற்றிலும் அவனுக்கே வழிபட்டு மார்க்கத்தில் பரிசுத்தத்துடன் அல்லாஹ் ஒருவனையே (பிரார்த்தித்து) அழையுங்கள்.
15
(அவனே) அந்தஸ்துகளை உயர்த்துபவன்; அர்ஷுக்குரியவன்; சந்திப்புக்குரிய (இறுதி) நாளைப்பற்றி அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக தன் அடியார்களில் தான் நாடியவர்கள் மீது கட்டளையை வஹீ மூலம் இறக்கி வைக்கிறான்.
16
அந்நாளில் அவர்கள் வெளிப்பட்டு வருவார்கள்; அவர்களுடைய எந்த விஷயமும் அல்லாஹ்வுக்கு மறைந்ததாக இருக்காது அந்நாளில் ஆட்சி யாருக்குடையதாக இருக்கும் - ஏகனாகிய, அடக்கியாளும் வல்லமை மிக்க அல்லாஹ்வுக்கே யாகும்.
17
அந்நாளில் ஒவ்வோர் ஆத்மாவும், அது சம்பாதித்ததற்குக் கூலி கொடுக்கப்படும்; அந்நாளில் எந்த அநியாயமும் இல்லை. நிச்சயமாக, அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்பதில் மிகவும் தீவிரமானவன்.
18
(நபியே!) அண்மையில் வரும் (கியாம) நாளைப்பற்றி அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக இருதயங்கள் விசனத்தால் நிரம்பி தொண்டைக்குழிகளுக்கு வரும் (அவ்)வேளையில், அநியாயக்காரர்களுக்கு இரக்கப்படும் நண்பனோ, அல்லது ஏற்றுக்கொள்ளப்படும் சிபாரிசு செய்பவனோ இருக்கமாட்டான்.
19
கண்கள் செய்யும் மோசத்தையும், உள்ளங்கள் மறைத்து வைப்பதையும் அவன் நன்கு அறிகிறான்.
20
மேலும், அல்லாஹ் உண்மையைக் கொண்டே தீர்ப்பளிப்பவன். அன்றியும், அவனையன்றி அவர்கள் (வேறு) எவர்களை அழைத்(துப் பிரார்த்தித்)தார்களோ, அவர்கள் யாதொரு விஷயத்தைப் பற்றியும் தீர்ப்புச் செய்ய மாட்டார்கள் - நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியெற்பவனாகவும், தீர்க்கமாகப் பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.
21
இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து இவர்களுக்கு முன் இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்க வில்லையா? அவர்கள், பலத்தாலும், பூமியில் (விட்டுச் சென்ற பூர்வ)சின்னங்களாலும் இவர்களைவிட வலிமையுடையவர்களாகவே இருந்தார்கள் - ஆனால் அவர்களின் பாவங்களின் காரணமாக அவர்களை அல்லாஹ் பிடித்துக் கொண்டான்; இன்னும் அல்லாஹ்விடமிருந்து அவர்களைக் காப்பாற்ற எவரும் இல்லை.
22
அது (ஏனெனில்) நிச்சயமாக அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தார்கள்; ஆனால், அவர்கள் நிராகரித்தனர். ஆகவே, அல்லாஹ் அவர்களைப் பிடித்தான் - நிச்சயமாக (அல்லாஹ்) வலிமை மிக்கவன்; தண்டிப்பதில் கடுமையானவன்.
23
மெய்யாகவே நாம் மூஸாவுக்கு நம்முடைய அத்தாட்சிகளையும், தெளிவான சான்றையும் கொடுத்தனுப்பினோம்-
24
ஃபிர்அவ்ன், ஹாமான், ஃகாரூன் ஆகியவர்களிடம்; ஆனால் அவர்களோ "(இவர்) பொய்யுiரைப்பவர், சூனியக்காரர்" என்று கூறினர்.
25
ஆகவே, அவர் நம்மிடமிருந்து சத்தியத்தை அவர்களிடம் கொண்டு வந்த போது, அவர்கள்; "இவருடன் ஈமான் கொண்டிருப்போரின் ஆண் குழந்தைகளை கொன்று, அவர்களின் பெண் குழந்தைகளை உயிருடன் விட்டு விடுங்கள்" என்று கூறினார்கள்; மேலும் காஃபிர்களின் சதி வழிகேட்டிலன்றி வேறில்லை.
26
மேலும் ஃபிர்அவ்ன் கூறினான்; "மூஸாவை கொலை செய்ய என்னை விட்டு விடுங்கள்! இன்னும் இவர் தம்முடைய இறைவனை அழை(த்துப் பிரார்த்தி)க்கட்டும்; நிச்சயமாக இவர் உங்கள் மார்க்கத்தை மாற்றிவிடுவார்; அல்லது இப்பூமியில் குழப்பத்தை வெளியாக்குவார் என்று நான் அஞ்சுகிறேன்" என்று.
27
மூஸா கூறினார்; "கேள்வி கணக்குக் கேட்கப்படும் நாள் மீது நம்பிக்கை கொள்ளாத, பெருமையடிக்கும் எல்லோரையும் விட்டு, என்னுடைய இறைவனாகவும், உங்களுடைய இறைவனாகவும் இருப்பவனிடம் நிச்சயமாக நான் பாதுகாவல் தேடுகிறேன்."
28
ஃபிர்அவ்னின் குடும்பத்தாரில் தம் ஈமானை மறைத்து வைத்திருந்த ஒரு நம்பிக்கை கொண்டவர் கூறினார்; "என் இறைவன் அல்லாஹ்வே தான்!" என்று ஒரு மனிதர் கூறுவதற்காக அவரை நீங்கள் கொன்று விடுவீர்களா? மேலும் அவர் மெய்யாகவே உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகளை உங்களிடம் கொண்டு வந்துள்ளார். எனவே அவர் பொய்யராக இருந்தால், அப்பொய் அவருக்கே (கேடு) ஆகும்; ஆனால் அவர் உண்மையாளராக இருந்தால், அவர் உங்களுக்கு வாக்களிக்கும் சில (வேதனைகள்) உங்களை வந்தடையுமே! நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறிய பொய்யரை நேர்வழியில் செலுத்தமாட்டான்."
29
என்னுடைய சமூகத்தார்களே! இன்று ஆட்சி உங்களிடம்தான் இருக்கிறது நீங்கள் தாம் (எகிப்து) பூமியில் மிகைத்தவர்களாகவும் இருக்கின்றீர்கள்; ஆயினும் அல்லாஹ்வின் தண்டனை நமக்கு வந்து விட்டால், நமக்கு உதவி செய்பவர் யார்? என்றும் கூறினார்) அதற்கு "நான் (உண்மை எனக்) காண்பதையே உங்களுக்கு நான் காண்பிக்கிறேன்; நேரான பாதையல்லாது (வேறு) எதையும் நான் உங்களுக்கு காண்பிக்கவில்லை" என ஃபிர்அவ்ன் கூறினான்.
30
நம்பிக்கை கொண்டிருந்த அவர் இன்னும் கூறினார்; "என்னுடைய சமூகத்தாரே! (அழிந்து போன மற்ற) கூட்டத்தினர்களின் நாட்களைப் போன்றவை உங்கள் மீது வந்து விடுமே என்று நான் நிச்சயமாக பயப்படுகிறேன்."
Sonraki 30 ayet →