1
தா, ஸீன். இவை குர்ஆனுடைய தெளிவான வேதத்துடைய - வசனங்களாகும்.
2
(இது) முஃமின்களுக்கு நேர்வழி காட்டியாகவும், நன்மாராயமாகவும் இருக்கிறது.
3
(அவர்கள் எத்தகையோரென்றால்) அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள்; இன்னும், ஜகாத்தைக் கொடுப்பார்கள்; அன்றியும், அவர்கள் மறுமை வாழ்வின் மீது திட நம்பிக்கை கொள்வார்கள்.
4
நிச்சயமாக எவர்கள் மறுமை வாழ்வில் நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுக்கு நாம் அவர்களுடைய செயல்களை அழகாக(த் தோன்றுமாறு) செய்தோம்; எனவே அவர்கள் தட்டழிந்து திரிகிறார்கள்.
5
அத்தகையவர்களுக்குத் தீய வேதனை உண்டு மறுமை வாழ்வில் அவர்கள் பெரும் நஷ்டமடையவர்களாக இருப்பார்கள்.
6
(நபியே!) நிச்சயமாக மிக்க ஞானமுடைய (யாவற்றையும்) நன்கறிந்தவனிடமிருந்து இந்த குர்ஆன் உமக்குக் கொடுக்கப் பட்டுள்ளது.
7
மூஸா தம் குடும்பத்தாரை நோக்கி; "நிச்சயமாக நான் நெருப்பைக் காண்கிறேன்; உங்களுக்கு நான் அதிலிருந்து (நாம் செல்ல வேண்டிய வழி பற்றிய) செய்தியைக் கொண்டு வருகிறேன், அல்லது நீங்கள் குளிர்காயும் பொருட்டு (உங்களுக்கு அதிலிருந்து) நெருப்புக் கங்கைக் கொண்டு வருகிறேன்" என்று கூறியதை (நபியே!) நினைவு கூர்வீராக!
8
அவர் அதனிடம் வந்த போது "நெருப்பில் இருப்பவர் மீதும், அதனைச் சூழ்ந்திருப்பவர் மீதும் பெரும் பாக்கயம் அளிக்கப் பெற்றுள்ளது மேலும் அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் மிகவும் பரிசுத்தமானவன்" என்று அழைக்கப்பட்டார்.
9
மூஸாவே! நிச்சயமாக நானே அல்லாஹ்! (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்.
10
உம் கைத்தடியைக் கீழே எறியும்; (அவ்வாறே அவர் அதை எறியவும்) அது பாம்புபோல் நெளிந்ததை அவர் கண்ட பொழுது, திரும்பிப் பார்க்காது (அதனை விட்டு) ஓடலானார் "மூஸாவே! பயப்படாதீர்! நிச்சயமாக (என்) தூதர்கள் என்னிடத்தில் பயப்பட மாட்டார்கள்."
11
ஆயினும், தீங்கிழைத்தவரைத் தவிர அ(த்தகைய)வரும் (தாம் செய்த) தீமையை (உணர்ந்து அதை) நன்மையானதாக மாற்றிக் கொண்டால், நிச்சயமாக நான் மிக மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றேன்.
12
'இன்னும் உம்முடைய கையை உமது (மார்புபக்கமாக) சட்டைப் பையில் நுழையப்பீராக!' அது ஒளி மிக்கதாய் மாசற்ற வெண்மையாக வெளிவரும். (இவ்விரு அத்தாட்சிகளும்) ஃபிர்அவ்னுக்கும், அவனுடைய சமூகத்தாருக்கும் (நீர் காண்பிக்க வேண்டிய) ஒன்பது அத்தாட்சிகளில் உள்ளவையாகும்; நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் சமூகத்தாராக இருக்கின்றனர்.
13
இவ்வாறு, நம்முடைய பிரகாசமான அத்தாட்சிகள் அவர்களிடம் வந்த போது, அவர்கள் "இது பகிரங்கமான சூனியமேயாகும்" என்று கூறினார்கள்.
14
அவர்களுடைய உள்ளங்கள் அவற்றை (உண்மையென) உறுதி கொண்ட போதிலும், அநியாயமாகவும், பெருமை கொண்டவர்களாகவும் அவர்கள் அவற்றை மறுத்தார்கள். ஆனால், இந்த விஷமிகளின் முடிவு என்னவாயிற்று என்பதை நீர் கவனிப்பீராக.
15
தாவூதுக்கும், ஸுலைமானுக்கும் நிச்சயமாக நாம் கல்வி ஞானத்தைக் கொடுத்தோம்; அதற்கு அவ்விருவரும்; "புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது அவன் தான், முஃமின்களான தன் நல்லடியார்களில் அநேகரைவிட நம்மை மேன்மையாக்கினான்" என்று கூறினார்கள்.
16
பின்னர், ஸுலைமான் தாவூதின் வாரிசானார் அவர் கூறினார்; "மனிதர்களே! பறவைகளின் மொழி எங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது மேலும், நாங்கள் எல்லா விதப் பொருள்களிலிருந்தும் (ஏராளமாக) அளிக்கப்பட்டுள்ளோம்; நிச்சயமாக இது தெளிவான அருள் கொடையாகும்.
17
மேலும் ஸுலைமானுக்கு ஜின்கள் மனிதர்கள் பறவைகள் ஆகியவற்றிலிருந்து அவரது படைகள் திரட்டப்பட்டு, அவை (தனித் தனியாகப்) பிரிக்கப்பட்டுள்ளன.
18
இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி) "எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; ஸுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)" என்று கூறிற்று.
19
அப்போது அதன் சொல்லைக் கேட்டு, அவர் புன்னகை கொண்டு சிரித்தார். இன்னும், "என் இறைவா! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக! இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக!" என்று பிரார்த்தித்தார்.
20
அவர் பறவைகளை(ப் பற்றியும்) பரிசீலனை செய்து "நான் (இங்கே) ஹுது ஹுது(ப் பறவையைக்) காணவில்லையே என்ன காரணம்? அல்லது அது மறைந்தவற்றில் நின்றும் ஆகி விட்டதோ?" என்று கூறினார்.
21
நான் நிச்சயமாக அதைக் கடுமையான வேதனையைக் கொண்டு வேதனை செய்வேன்; அல்லது அதனை நிச்சயமாக அறுத்து விடுவேன்; அல்லது (வராததற்கு) அது என்னிடம் தெளிவான ஆதாரத்தைக் கொண்டு வர வேண்டும் என்றும் கூறினார்.
22
(இவ்வாறு கூறி) சிறிது நேரம் தாமதித்தார் அதற்குள் (ஹுது ஹுது வந்து) கூறிற்று "தாங்கள் அறியாத ஒரு விஷயத்தை நான் அறிந்து கொண்டேன். 'ஸபா'விலிருந்து உம்மிடம் உறுதியான செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன்."
23
நிச்சயமாக அ(த் தேசத்த)வர்களை ஒரு பெண் ஆட்சி புரிவதை நான் கண்டேன்; இன்னும், அவளுக்கு (தேவையான) ஒவ்வொரு பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது மகத்தான ஓர் அரியாசனமும் அவளுக்கு இருக்கிறது.
24
அவளும், அவளுடைய சமூகத்தார்களும் அல்லாஹ்வையன்றி, சூரியனுக்கு ஸுஜூது செய்வதை நான் கண்டேன்; அவர்களுடைய (இத்தவறான) செயல்களை அவர்களுக்கு ஷைத்தான் அழகாகக் காண்பித்து, அவர்களை நேரான வழியிலிருந்து தடுத்துள்ளான்; ஆகவே அவர்கள் நேர்வழி பெறவில்லை.
25
வானங்களிலும், பூமியிலும், மறைந்திருப்பவற்றை வெளியாக்குகிறவனும்; இன்னும் நீங்கள் மறைப்பதையும், நீங்கள் வெளியாக்குவதையும் அறிபவனுமாகிய அல்லாஹ்வுக்கு அவர்கள் ஸுஜூது செய்து வணங்க வேண்டாமா?
26
அல்லாஹ் - அவனையன்றி வணக்கத்திற்குரிய நாயன் (வேறு) இல்லை. (அவன்) மகத்தான அர்ஷுக்கு உரிய இறைவன் (என்று ஹுது ஹுது கூறிற்று).
27
(அதற்கு ஸுலைமான்;) "நீ உண்மை கூறுகிறாயா அல்லது பொய்யர்களில் நீ இருக்கிறாயா என்பதை நாம் விரைவிலேயே கண்டு கொள்வோம்" என்று கூறினார்.
28
என்னுடைய இந்தக் கடிதத்தைக் கொண்டு செல்; அவர்களிடம் இதைப் போட்டு விடு பின்னர் அவர்களை விட்டுப் பின் வாங்கி: அவர்கள் என்ன முடிவு செய்கிறார்கள் என்பதைக் கவனி (என்று கூறினார்).
29
(அவ்வாறே ஹுது ஹுது செய்ததும் அரசி) சொன்னாள்: "பிரமுகர்களே! (மிக்க) கண்ணியமுள்ள ஒரு கடிதம் என்னிடம் போடப்பட்டுள்ளது."
30
நிச்சயமாக இது ஸுலைமானிடமிருந்து வந்துள்ளது இன்னும் நிச்சயமாக இது 'பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' என்று (துவங்கி) இருக்கிறது.
Sonraki 30 ayet →