2
(நபியே!) நீர் துன்பப்படுவதற்காக நாம் இந்த குர்ஆனை உம்மீது இறக்கவில்லை.
3
(அல்லாஹ்வுக்கு) அஞ்சுவோருக்கு நல்லுபதேசமே அன்றி (வேறில்லை).
4
பூமியையும், உயர்வான வானங்களையும் படைத்தவனிடமிருந்து அது இறக்கி அருளப் பெற்றது.
5
அர்ரஹ்மான் அர்ஷின் மீது அமைந்தான்.
6
வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும், இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவையும், மண்ணுக்கு அடியில் உள்ளவையும் அவனுக்கே உரியன.
7
(நபியே!) நீர் உரக்கச் சொன்னாலும் நிச்சயமாக அவன் இரகசியத்தையும் (அதை விட) மறைவானதையும் அறிகிறான்.
8
அல்லாஹ் - அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை, அவனுக்கு அழகிய திரு நாமங்கள் இருக்கின்றன.
9
இன்னும் (நபியே!) மூஸாவின் வரலாறு உம்மிடம் வந்ததா?
10
அவர் நெருப்பைக் கண்டு தம் குடும்பத்தாரிடம் "நீங்கள் (இங்கு சிறிது) தங்குங்கள்; நிச்சயமாக நான் நெருப்பைக் கண்டேன்; ஒரு வேளை அதிலிருந்து உங்களுக்கு ஓர் எரி கொள்ளியைக் கொண்டு வரவோ, அல்லது நாம் செல்ல வேண்டிய பாதையை அந் நெருப்பி(ன் உதவியி)னால் கண்டு பிடிக்கவோ செய்யலாம்" என்று (கூறினார்).
11
அவர் (நெருப்பின்) அருகே வந்த போது "மூஸாவே!" என்று அழைக்கப் பட்டார்.
12
நிச்சயமாக நாம் தான் உம்முடைய இறைவன், நீர் உம் காலணிகள் இரண்டையும் கழற்றிவிடும்! நிச்சயமாக நீர் 'துவா' என்னும் புனிதமான பள்ளத்தாக்கில் இருக்கிறீர்.
13
இன்னும் "நாம் உம்மை (என் தூதராக)த் தேர்ந்தெடுத்தேன், ஆதலால் வஹீயின் வாயிலாக (உமக்கு) அறிவிக்கப் படுவதற்கு நீர் செவியேற்பீராக.
14
நிச்சயமாக நாம் தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு நாயன் இல்லை, ஆகவே, என்னையே நீர் வணங்கும், என்னை தியானிக்கும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக.
15
ஒவ்வோர் ஆத்மாவும் தான் செய்ததற்குத் தக்கபடி பிரதிபலன்கள் அளிக்கப்படும் பொருட்டு (நியாயத் தீர்ப்புக்குரிய) வேளை நிச்சயமாக வரவிருக்கிறது, ஆயினும் அதை மறைத்து வைக்க நாடுகிறேன்.
16
ஆகவே, அதனை நம்பாது, தன் (மன) இச்சையைப் பின்பற்றுபவன் திடனாக அதைவிட்டும் உம்மைத் திருப்பிவிட வேண்டாம். அவ்வாறாயின், நீர் அழிந்துபோவீர்.
17
மூஸாவே! உம்முடைய வலது கையில் இருப்பது என்ன? (என்றும் அல்லாஹ் கேட்டான்.)
18
(அதற்கவர்) "இது என்னுடைய கைத்தடி, இதன் மீது நான் சாய்ந்து கொள்வேன், இதைக் கொண்டு என் ஆடுகளுக்கு இலைகள் பறிப்பேன், இன்னும் இதில் எனக்கு வேறு தேவைகளும் நிறைவேறுகின்றன" என்று கூறினார்.
19
அதற்கு (இறைவன்) "மூஸாவே! அதை நீர் கீழே எறியும்" என்றான்.
20
அவ்வாறே அவர் அதனைக் கீழே எறிந்தார், அப்போது அது ஊர்ந்து செல்லும் ஒரு பாம்பாயிற்று.
21
(இறைவன்) கூறினான்: "அதைப் பிடியும், பயப்படாதீர்; உடனே நாம் அதை அதன் பழைய நிலைக்கே மீட்டுவோம்."
22
இன்னும், உம் கையை உம் விலாப்புறமாக புகுத்தி (வெளியில்) எடும், அது ஒளி மிக்கதாய் மாசற்ற வெண்மையாக வெளிவரும், இது மற்றோர் அத்தாட்சியாகும்.
23
(இவ்வாறு) நம்முடைய பெரிய அத்தாட்சிகளிலிருந்து (சிலவற்றை) உமக்குக் காண்பிக்கிறோம்.
24
ஃபிர்அவ்னிடம் நீர் செல்வீராக! நிச்சயமாக அவன் (வரம்பு) மீறி விட்டான் (என்றும் அல்லாஹ் கூறினான்).
25
(அதற்கு மூஸா) கூறினார்: "இறைவனே! எனக்காக என் நெஞ்சத்தை நீ (உறுதிப்படுத்தி) விரிவாக்கி தருவாயாக!
26
என் காரியத்தை எனக்கு நீ எளிதாக்கியும் வைப்பாயாக!
27
என் நாவிலுள்ள (திக்குவாய்) முடிச்சையும் அவிழ்ப்பாயாக!
28
என் சொல்லை அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக!
29
என் குடும்பத்திலிருந்து எனக்கு (உதவி செய்ய) ஓர் உதவியாளரையும் ஏற்படுத்தித் தருவாயாக!
30
என் சகோதரர் ஹாரூனை (அவ்வாறு ஏற்படுத்தித் தருவாயாக)!
Sonraki 30 ayet →