Ana SayfaMealler › J.T.Foundation
JT

J.T.Foundation

J.T.Foundation
J.T.Foundation meali ile okumaya başla
Kehf 1 / 110
1
தன் அடியார் மீது எந்த விதமான (முரண்பாடு) கோணலும் இல்லாததாக ஆக்கி இவ்வேதத்தை இறக்கி வைத்தானே, அந்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகும்.
J.T.Foundation 18:1
2
அது உறுதியான (வழியைக் காண்பிப்ப)து, அவனிடத்திலிருந்துள்ள கடினமான வேதனையைப் பற்றி அச்சமூட்டுவதற்காகவும் ஸாலிஹான (நற்)செயல்கள் செய்யும் முஃமின்களுக்கு - நிச்சயமாக அவர்களுக்கு அழகிய நற்கூலி(யாக சுவனபதி) இருக்கிறது என்று நன்மாராயங் கூறுவதற்காகவும் (குர்ஆனை அருளினான்).
J.T.Foundation 18:2
3
அதில் (அதாவது சுவனபதியில்) அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள்.
J.T.Foundation 18:3
4
அல்லாஹ் (தனக்கென) ஒரு மகனை எடுத்துக் கொண்டான் என்று சொல்பவர்களை எச்சரிப்பதற்காகவும் (இதனை இறக்கி வைத்தான்).
J.T.Foundation 18:4
5
அவர்களுக்கோ, இன்னும் அவர்களுடைய மூதாதையர்களுக்கோ இதைப் பற்றி எவ்வித அறிவாதாரமுமில்லை அவர்களுடைய வாய்களிலிருந்து புறப்படும் (இந்த) வார்த்தை பெரும் பாபமானதாகும்; அவர்கள் கூறுவது பொய்யேயன்றி வேறில்லை.
J.T.Foundation 18:5
6
(நபியே!) இந்த (வேத) அறிவிப்பில் அவர்கள் நம்பிக்கை கொள்ளாவிட்டால், அவர்களுக்காக வியாகூலப்பட்டு, நீர் உம்மையே அழித்துக் கொள்வீர்கள் போலும்!
J.T.Foundation 18:6
7
(மனிதர்களில் அழகிய செயலுடையவர்கள் யார் என்று அவர்களைச் சோதிப்பதற்காக, நிச்சயமாக பூமியிலுள்ளவற்றை அதற்கு அலங்காரமாக நாம் ஆக்கினோம்.
J.T.Foundation 18:7
8
இன்னும், நிச்சயமாக நாம் அதன் மீது உள்ளவற்றை (ஒரு நாள் அழித்துப்) புற்பூண்டில்லாப் பாலைநிலமாக்கி விடுவோம்.
J.T.Foundation 18:8
9
(அஸ்ஹாபுல் கஹ்ஃபு என்ற குகையிலிருந்தோரைப் பற்றி) அந்த குகையிலிருந்தோரும், சாஸனத்தையுடையோரும் நம்முடைய ஆச்சரியமான அத்தாட்சிகளில் நின்றும் உள்ளவர்கள் என எண்ணுகிறீரோ,
J.T.Foundation 18:9
10
அந்த இளைஞர்கள் குகையினுள் தஞ்சம் புகுந்த போது அவர்கள் "எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்காக எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக!" என்று கூறினார்கள்.
J.T.Foundation 18:10
11
ஆகவே நாம் அவர்களை எண்ணப்பட்ட பல ஆண்டுகள் வரை அக்குகையில் (தூங்குமாறு) அவர்களுடைய காதுகளின் மீது (திரையிட்டுத்) தடையேற்படுத்தினோம்.
J.T.Foundation 18:11
12
பின்பு, (அக்குகையில் தங்கியிருந்த) இருபிரிவினர்களில் எப்பிரிவினர், தாங்கள் (குகையில்) தங்கியிருந்த கால அளவை நன்கு அறிந்திருந்தார்கள் என்பதைச் சோதிப்பதற்காக அவர்களை நாம் எழுப்பினோம்.
J.T.Foundation 18:12
13
(நபியே!) நாம் உமக்கு அவர்களுடைய வரலாற்றை உண்மையைக் கொண்டு அறிவிக்கிறோம்; நிச்சயமாக அவர்கள் இளைஞர்கள் - தங்கள் இறைவன் மீது ஈமான் கொண்டார்கள்; இன்னும் நாம் அவர்களை நேர் வழியில் அதிகப்படுத்தினோம்.
J.T.Foundation 18:13
14
அவர்கள் (கொடுமைக்கார அரசன் முன்னிலையில்) எழுந்து நின்று "வானங்களுக்கும், பூமிக்கும் இறைவனாகிய அவனே, எங்களுடைய இறைவன்; எக்காலத்தும் அவனையன்றி வேறு எவரையும் நாயனென்று அழைக்க மாட்டோம்; (அப்படிச் செய்தால் குஃப்ரில் கொண்டு சேர்க்கும்) - வரம்பு மீறியதைச் சொன்னவர்கள் ஆவோம்" என்று அவர்கள் உறுதியாகக் கூறிய நிலையில் அவர்கள் இதயங்களை நாம் வலுப்படுத்தினோம்.
J.T.Foundation 18:14
15
எங்கள் சமூகத்தாராகிய அவர்கள் அவனையன்றி வேறு நாயனை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்; அவர்கள் அவற்றின் மீது தெளிவான அத்தாட்சியைக் கொண்டு வரவேண்டாமா? ஆகவே அல்லாஹ்வின் மீது பொய்யாக இட்டுக் கட்டுபவனை விட அநியாயக்காரன் யார்? (என்றும் கூறினார்கள்).
J.T.Foundation 18:15
16
அவர்களையும், அவர்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றையும் விட்டு விலகி நீங்கள், குகையின்பால் ஒதுங்கிக் கொள்ளுங்கள், உங்களுடைய இறைவன் தன்னுடைய ரஹ்மத்திலிருந்து உங்களுக்கு விசாலமாகக் கொடுத்து, உங்கள் காரியத்தில் உணவு பிரச்சனையை உங்களுக்கு எளிதாக்கித் தருவான் (என்று அவர்களில் ஓர் இளைஞர் சொன்னார்).
J.T.Foundation 18:16
17
சூரியன் உதயமாகும் போது (அவர்கள் மீது படாமல்) அது அவர்களுடைய குகையின் வலப்புறம் சாய்வதையும், அது அஸ்தமிக்கும் போது அது அவர்களுடைய இடப்புறம் செல்வதையும் நீர் பார்ப்பீர்; அவர்கள் அதில் ஒரு விசாலமான இடத்தில் இருக்கின்றனர் - இது அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளதாகும், எவரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகிறானோ, அவரே நேர் வழிப்பட்டவராவார்; இன்னும், எவனை அவன் வழிகேட்டில் விடுகிறானோ, அவனுக்கு நேர் வழிகாட்டும் உதவியாளர் எவரையும் நீர் காணவே மாட்டீர்.
J.T.Foundation 18:17
18
மேலும், அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோதிலும், நீர் அவர்களை விழித்துக் கொண்டிருப்பவர்களாகவே எண்ணுவீர்; அவர்களை நாம் வலப்புறமும் இடப்புறமுமாக புரட்டுகிறோம்; தவிர, அவர்களுடைய நாய் தன் இரு முன்னங்கால்களையும் வாசற்படியில் விரித்(துப் படுத்)திருக்கிறது அவர்களை நீர் உற்றுப்பார்த்தால், அவர்களை விட்டும் வெருண்டு ஓடிப் பின்வாங்குவீர்; அவர்களில் நின்றும் உண்டாகும் பயத்தைக் கொண்டு நிரம்பிவிடுவீர்,
J.T.Foundation 18:18
19
இன்னும் அவர்களிடையே ஒருவரையொருவர் கேட்டுக் கொள்வதற்காக நாம் அவர்களை இவ்வாறு எழுப்பினோம்; அவர்களிலிருந்து சொல்பவர் (ஒருவர்) "நீங்கள் எவ்வளவு நேரம் (நித்திரையில்) இருந்தீர்கள்?" எனக் கேட்டார்; "ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறிது பாகம் தங்கியிருந்தோம்" எனக் கூறினார்கள்; (மற்றவர்கள்) "நீங்கள் (நித்திரையில்) இருந்த காலத்தை உங்கள் இறைவன்தான் நன்கு அறிந்தவன்; ஆகவே, உங்களில் ஒருவரை இந்த வெள்ளிக் காசுடன் பட்டணத்திற்கு அனுப்புங்கள்; அவர்கள் சுத்தமான ஆகாரம் எது என்பதை நன்கு கவனித்து, அதிலிருந்து ஆகாரத்தை உங்களுக்காகக் கொண்டு வரட்டும்; மேலும் அவர் எச்சரிக்கையாக இருக்கட்டும்; உங்களைப் பற்றி எவருக்கும் அவர் அறிவித்து விட வேண்டாம் (என்றனர்).
J.T.Foundation 18:19
20
ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் உங்களை அறிந்து கொண்டால், உங்களைக் கல்லாலடித்துக் கொன்றுவிடுவார்கள்; அல்லது தங்களுடைய மார்க்கத்தில் உங்களை மீட்டி விடுவார்கள்; அப்புறம், நீங்கள் ஒருபோதும் வெற்றியடைய மாட்டீர்கள்" (என்றும் கூறினர்).
J.T.Foundation 18:20
21
இன்னும், நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்றும், நிச்சயமாக கியாம நாளிலும் சந்தேகமில்லை என்றும் அப்பட்டணவாசிகள் அறிந்து கொள்வதற்காகவே, இவ்வாறு அவர்களைப் பற்றிய (விஷயத்)தை வெளியாக்கினோம்; (அப்பட்டணவாசிகளோ) "இவர்கள் யார் என்பதை பற்றி தர்க்கித்துக் கொண்டதை (நபியே! நினைவு கூறும்) "இவர்கள் (இருந்த இடத்தின்) மீது ஒரு கட்டடத்தைக் கட்டுங்கள்; இவர்களை(ப் பற்றி) இறைவனே நன்கறிவான் என்றனர்; இ(வ்விவாதத்)தில் எவர்களுடைய கருத்து மிகைத்ததோ அவர்கள்; "நிச்சயமாக அவர்கள் மீது ஒரு மஸ்ஜிதை அமைப்போம்" என்று கூறினார்கள்.
J.T.Foundation 18:21
22
(அவர்கள்) மூன்று பேர் தாம்; அவர்களில் நான்காவது அவர்களுடைய நாய் என்று (சிலர்) கூறுகின்றனர்(இல்லை) அவர்கள் ஐந்து பேர் தாம்; - அவர்களில் ஆறாவது அவர்களுடைய நாய்" என்று மறைவானதை ஊகம் செய்து (சிலர்) கூறுகிறார்கள்; இன்னும் (சிலர்) "ஏழுபேர் - அவர்களில் எட்டாவது அவர்களுடைய நாய்" என்று சொல்கிறார்கள் - (நபியே!) அவர்களுடைய எண்ணிக்கையை என்னுடைய இறைவன் தான் நன்கறிவான்; சிலரைத் தவிர, மற்றெவரும் அவர்களைப் பற்றி அறிய மாட்டார்கள்" என்று கூறுவீராக! ஆகவே, அவர்களைப் பற்றி வெளிரங்கமான விஷயம் தவிர (வேறு எதும் பற்றியும்) நீர் தர்க்கம் செய்ய வேண்டாம்; இன்னும் அவர்களைக் குறித்து இவர்களில் எவரிடமும் நீர் தீர்ப்புக் கேட்கவும் வேண்டாம்.
J.T.Foundation 18:22
23
(நபியே!) இன்னும் எந்த விஷயத்தைப் பற்றியும் "நிச்சயமாக நாம் நாளை அதைச் செய்பவனாக இருக்கிறேன்" என்று நிச்சயமாக கூறாதீர்கள்.
J.T.Foundation 18:23
24
இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால் என்று சேர்த்துச் சொன்னால்) அன்றி தவிர, (இதை) நீர் மறந்து விடுங்கள் உம் இறைவனை நினைவு படுத்திக் கொள்வீராக் இன்னும், "என்னுடைய இறைவன், நேர் வழியில் இதை விட இன்னும் நெருங்கிய (விஷயத்)தை எனக்கு அறிவிக்கக்கூடும்" என்றும் கூறுவீராக!
J.T.Foundation 18:24
25
அவர்கள் தங்கள் குகையில் முன்னூறு வருடங்களுடன் மேலும் ஒன்பது அதிகமாக்கி (முன்னூற்றி ஒன்பது வருடங்கள்) தங்கினார்கள்.
J.T.Foundation 18:25
26
அவர்கள் (அதில்) தரிப்பட்டிருந்த (காலத்)தை அல்லாஹ்வே நன்கறிந்தவன்; வானங்களிலும் பூமியிலும் மறைவாய் இருப்பவை அவனுக்கே உரியனவாகும்; அவற்றை அவனே நன்றாக பார்ப்பவன்; தெளிவாய்க் கேட்பவன் - அவனையன்றி அவர்களுக்கு உதவி செய்வோர் எவருமில்லை, அவன் தன்னுடைய அதிகாரத்தில் வேறு எவரையும் கூட்டாக்கிக் கொள்வதுமில்லை என்று (நபியே!) நீர் கூறும்.
J.T.Foundation 18:26
27
இன்னும் (நபியே!) உம்முடைய இறைவனின் வேதத்திலிருந்து உமக்கு வஹீ மூலம் அருளப்பட்டதை நீர் ஓதி வருவீராக - அவனுடைய வார்த்தைகளை மாற்றக் கூடியவர் எவருமில்லை இன்னும் அவனையன்றி புகலிடம் எதையும் நீர் காணமாட்டீர்.
J.T.Foundation 18:27
28
(நபியே!) எவர் தம் இறைவனுடைய திருப்பொருத்த்தை நாடியவர்களாக காலையிலும், மாலையிலும் அவனைப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்களோ, அவர்களுடன் நீரும் பொறுமையை மேற் கொண்டிருப்பீராக! இன்னும் உலக வாழ்க்கையின் அலங்காரத்தை நாடி அ(த்தகைய)வர்களை விட்டும் உம் இரு கண்களையும் திருப்பி விடாதீர்; இன்னும், எவனுடைய இதயத்தை நம்மை நினைவு கூர்வதிலிருந்து நாம் திருப்பி விட்டோமோ அவனை நீர் வழிபடாதீர்; ஏனெனில் அவன்தன் இச்சையைப் பின் பற்றியதனால் அவனுடைய காரியம் வரம்பு மீறியமாகி விட்டது.
J.T.Foundation 18:28
29
(நபியே!) இன்னும் நீர் கூறுவீராக "இந்தச் சத்திய (வேதம்) உங்கள் இறைவனிடமிருந்து (வந்து)ள்ளது" ஆகவே, விரும்புபவர் (அதனை) நம்பி கொள்ளட்டும். இனனும் விரும்புபவர் (அதனை) நிராகரிக்கட்டும். அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம்; (அந்நெருப்பின்) சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்; அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும்; மிகக் கேடான பானமாகும் அது! இன்னும், இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும்.
J.T.Foundation 18:29
30
நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு, (ஸாலிஹான) நற் கருமங்களையும் செய்கிறார்களோ, அத்தகைய அழகிய செயல் செய்வோரின் (நற்) கூலியை நாம் நிச்சயமாக வீணாக்க மாட்டோம்.
J.T.Foundation 18:30